என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வீடுகள் சேதம்"
- பல்வேறு கோணங்களில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
- மர்ம பொருள் வெடித்த சம்பவம் நடந்துள்ளதால், அப்பகுதி குடியிருப்பு வாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையம் அருகே உள்ள பழைய குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று இரவு மர்ம பொருள் வெடித்து அப்பகுதி தீப்பிடித்து எரிந்தது. சத்தத்தின் அதிர்வால் அங்குள்ள காவலர் குடியிருப்பு பகுதி வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது.
மர்ம பொருள் வெடித்த இடத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்படும் பழைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டடு இருந்தது., இதனால் இதிலிருந்து பெட்ரோல் லீக்காகி தீப்பற்றி எரிந்து பேட்டரிகள் வெடித்ததா? சமூக விரோதிகள் தீவைத்து சென்றனரா? அல்லது ஏதேனும் வெடி பொருள் பதுக்கி வைக்கப்பட்டு வெடித்ததா? என செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய்பிரனீத் உத்தரவின் பெயரில் பல்வேறு கோணங்களில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களது தடயவியல் ஆய்வின் போது ஏதேனும் வெடிகுண்டு தொடர்புடைய பகுதிகளோ, அதற்கான ரசாயனங்களோ இருப்பதற்கான அறிகுறிகள் இருந்தால், சென்னையில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வந்து புலன் விசாரணை மேற்கொள்வார்கள் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காவல் நிலையத்தின் அருகிலேயே இந்த மர்ம பொருள் வெடித்த சம்பவம் நடந்துள்ளதால், அப்பகுதி குடியிருப்பு வாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மண் சுவர்களால் ஆன வீடுகள் மழையினால் இடிந்து விழுந்தது.
- அதிர்ஷ்டவசமாக அங்கிருந்தவர்கள் காயமின்றி தப்பினர்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் கிராமத்தில் நேற்று மாலை பெய்த மழை மற்றும் சூறாவளி காற்றில் அங்குள்ள ஓட்டு வீடுகளில் ஓடுகள் தூக்கி வீசப்பட்டது. சுப்பிரமணியன், ஜோதி, சுடலை, பெருமாள், மகரஜோதி ஆகியோரது வீடுகளின் சுவர் மற்றும் ஓடுகள் சேதம் அடைந்துள்ளன.
மேலும் மண் சுவர்களால் ஆன வீடுகள் மழையினால் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்தவர்கள் காயமின்றி தப்பினர். பொருட்கள் மட்டும் சேதமடைந்தது. ஓடுகள் உடைந்த வீட்டினை தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து தலைவர் செல்விரவிக்குமார், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செல்லையா, கிராம நிர்வாக அலுவலர் சுப்பையாபாண்டியன் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.
- இரவு, பகல் என இரு வேளைகளிலும் கனமழை கொட்டி வருகிறது.
- பந்தலூர் பகுதியே வெள்ளக்காடாக மாறியுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக இரவு, பகல் என இரு வேளைகளிலும் கனமழை கொட்டி வருகிறது.
நேற்றும், பந்தலூர், நெலாக்கோட்டை, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, பிதர்காடு, பாட்டவயல், நெலாக்கோட்டை, கரியசோலை, சேரம்பாடி, எருமாடு மற்றும் கூடலூர், தேவர்சோலை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.
பந்தலூர் பஜாரில் சாலையிலும், கால்வாயிலும் வெள்ளம் ஆறுபோல் ஓடுகிறது. வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே சாலையில் உள்ள குழிகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியே தண்ணீர் நிரம்பி குளம் போல காட்சியளித்து கொண்டிருக்கிறது.
மழை வெள்ளம் செல்வதற்கு வழி இல்லாததால், பந்தலூர் பஜார், கோழிக்கோடு-கூடலூர் செல்லும் சாலை, தாலுகாஅலுவலகம் செல்லும் சாலை, கூவமூலா செல்லும் சாலைகளிலும் வெள்ளம் தேங்கி நிற்கிறது.
அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் பந்தலூர் பகுதியே வெள்ளக்காடாக மாறியுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் பொன்னானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் 6 வீடுகள் சேதம் அடைந்தன. அங்கிருந்தவர்கள் மீட்கப்பட்டு, அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் தங்க வைக்கபட்டுள்ளனர்.
இதேபோல் அம்பலமூலா சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வட்டகொல்லி, மணல்வயல் ஆதிவாசிகாலனியில் 4 குடும்பங்களை சேர்ந்த 17 பேர் அம்பலமூலா அரசு தொடக்கபள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளது.
நெலாக்கோட்டை அருகே கூவச்சோலையில் பெய்த மழைக்கு அந்த பகுதியில் உள்ள 4 வீடுகள் இடிந்து விழுந்தன. அங்கிருந்த 10 குடும்பங்களை சேர்ந்த 31 பேர் நெலாக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.
சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண் 1, 2 பகுதிகளில் தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு பின்புறம் மண்சரிவு ஏற்பட்டதுடன் வீடுகளுக்குள் வெள்ளமும் புகுந்தது. இதனால் தொழிலாளர்கள் கடும் அவதியடைந்தனர். வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை நீடித்தது. இருவயல், குற்றிமுச்சு, கம்மாத்தி, புத்தூர் வயல் பகுதிகளில் விளைநிலங்கள் மற்றும் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது.
இருவயல், புத்தூர் வயல் பகுதிகளில் 14 குடும்பத்தை சேர்ந்த 49 பேர் மீட்கப்பட்டு தொரப்பள்ளி அரசு பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
பந்தலூரில் உள்ள அத்திமாநகர், தொண்டியாளம் பகுதிகளில் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை யினர் உடனடியாக அகற்றி போக்கு வரத்தை சீர் செய்தனர்.
தொடர் மழையால் முதுமலை பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள ஆற்றுப்பாலத்திற்கு மேல் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வனத்துறையினர், வருவாய்த்துறையினர் விரைந்து வந்து ஜே.சி.பி எந்திரம் மூலம் பாலத்திற்கு அடியில் தேங்கிய மரக்கட்டைகளை அகற்றினர். அதன்பின்னர் வாகனங்கள் அந்த வழியாக இயக்கப்பட்டன.
கூடலூர் பகுதியில் பெய்து வரும் மழைக்கு பாடந்தொரையில் உள்ள பால் சொசைட்டியை சுற்றி மழைவெள்ளம் சூழ்ந்தது. அங்கு வந்தவர்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்று பால் கேனை வைத்து சென்றனர்.
கூடலூர், பந்தலூர் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
- கேரள மாநிலத்தில் பல மாவட்டங்களில் கனமழை கொட்டியது.
- கேரள கடற்கரைகள் முழுவதும் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கடந்த மாத இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அது மட்டுமினறி பல மாவட்டங்களில் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது போன்று கனமழை முதல் மிக கனமழை வரை பெய்கிறது.
மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும் வகையில் கனமழை பெய்யும் மாவட்டங்கள் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டு, அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அந்த மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் பல மாவட்டங்களில் நேற்றும் கனமழை கொட்டியது. திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி, கோட்டயம், வயநாடு, பத்தினம்திட்டா எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகள் மட்டுமின்றி, பிரதான சாலைகளிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இடுக்கி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலையோர பகுதிகளில் இரவு நேர பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இடுக்கி, வயநாடு, கோட்டயம் ஆகிய 3 மாவட்டத்தில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் கேரள கடற்கரைகள் முழுவதும் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் கேரள மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஜூலை 3-ந்தேதி வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று அறிவித்திருக்கிறது.
அந்த மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 64.5 மில்லிமீட்டர் முதல் 115.5 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அந்த 9 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கோட்டயம் மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதனால் அங்கு பள்ளிகள், கல்லூரிகள், டியூசன் மையங்கள், அங்கன்வாடிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டன. மேலும் ஆலப்புழா மாவட்டத்தில் குட்டநாடு, அம்பலப்புழா, சேர்த்தலா, செங்கனூர் ஆகிய தாலு காக்களுக்கு மாவட்ட கலெக்டர் இன்று விடுமுறை அறிவித்தார்.
கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 115 வீடுகள் சேதமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 150 குடும்பங்களுக்கும் மேற்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.
- தீயில் 2 நகரங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தது.
- காட்டுத்தீயையொட்டி அங்கு வெப்பம் அதிகரிப்பதற்கான சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
சாண்டியாகோ:
தென் அமெரிக்கா நாடான சிலியில் உள்ள கடற்கரை நகரமான வினாடெல்மர் மற்றும் வாலடரைகோ மலைபகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. தீ மளமளவென வனப்பகுதிக்குள் வேகமாக பரவியது.
பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிந்ததால் ஏராளமானோர் சிக்கி தீயில் கருகி இறந்தனர். பலியானவர்கள் உடல்கள் ரோட்டில் கருகிய நிலையில் கிடந்தது. பலர் தீக்காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர்.
இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டர்கள் மூலமும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. ஆனாலும் தீ கட்டுக்குள் வரவில்லை. தெடர்ந்து தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.
காட்டுத்தீயில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
காட்டுத்தீயில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. அவர்கள் கதி என்ன வென்று தெரியவில்லை. தீயில் 2 நகரங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தது. ரோட்டில் நிறுத்தப்பட்டு இருந்த ஏராளமான வாகனங்கள் தீக்கிரையானது. தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு மிகப்பெரிய சோகத்தை எதிர்கொண்டுள்ளது என சிலி அதிபர் கேப்ரியல் போரிஸ் தெரிவித்துள்ளார்.
சிலிநாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு கடுமையான பூகம்பம் ஏற்பட்டு 500 பேர் இறந்தனர். அதற்கு பிறகு நடந்த மோசமான சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. காட்டுத்தீயையொட்டி அங்கு வெப்பம் அதிகரிப்பதற்கான சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
- சுமார் 10 வீடுகளில் மின்சாதன பொருள்கள் சேதம் அடைந்துள்ளது தெரியவருகிறது
- உடனடியாக மின் இணைப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி மடவா மேடு கிராமத்தை சேர்ந்தவர் சுமதி ராஜ்குமார்.
இன்று காலை சீர்காழி பகுதியில் மழை பெய்தது. அப்போது இவரது வீட்டை மின்னல் தாக்கியது.
அதில் வீட்டில் உள்ள அனைத்து மின்சார பொருட்களும் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.
மேலும் மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட புகை மூட்டத்தில் இருந்து குழந்தைகளை மீட்டுக்கொண்டு அவர் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினார்.
இதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் பவளச்சந்திரன் தாசில்தாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அடிப்படையில் தாசில்தார் இளங்கோவன் நேரடியாக களத்தில் ஆய்வு செய்தார்.
மேலும் மின்னல் தாக்கிய வீட்டிலிருந்து அருகாமையில் உள்ள சுமார் 10 வீடுகளில் மின்சாதன பொருள்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது .
ஆய்வின் போது கொள்ளிடம் ஒன்றிய சேர்மன் ஜெயப்பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி, மண்டல துணை வட்டாட்சியர் பாபு, தமிழ்நாடு மின்சார வாரிய உதவி பொறியாளர் பாரிவள்ளல் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதுகுறித்து தாசில்தார் தெரிவிக்கையில் சேத விவரங்கள் கிராம நிர்வாக அலுவலர் மூலம் கணக்கெடுப்பு செய்யப்பட்டு, இழப்பீடு பெற்று தர மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தார்.
மேலும் வட்டாட்சியர் இளங்கோவனால் தமிழ்நாடு மின்சார வாரிய உதவிப் பொறியாளரிடம் உடனடியாக மின் இணைப்பு வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டது.
- மீன்பிடி வலைகளை பாதுகாக்க வைக்கப்படும் 2 களமும் கடல் சீற்றத்தில் சிக்கியுள்ளது.
- மீனவர்கள் தங்களது மீன் வலை, படகு போன்றவற்றை கடற்கரை பகுதியில் உள்ள சுடுகாட்டில் நிறுத்தி வைத்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை பிள்ளைச்சாவடி கிராமம் கடலோரப் பகுதியில் உள்ளது. இங்கு ஏற்கனவே கடல் அரிப்பு காரணமாக 10-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து செல்லப்பட்டது. இதையடுத்து கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. ஏற்பாட்டின் பேரில் கல் கொட்டும்பணியை அரசு மேற்கொண்டது.
ஆனால், தமிழக பகுதியில் கொட்டப்பட்டுள்ளது போல கடல் நோக்கி தூண்டில் வளைவு அமைக்காமல் சாலை போடுவது போல் கல் கொட்டப்பட்டது.
இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக கல் கொட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று ஏற்பட்ட கடல் சீற்றத்தின் காரணமாக பிள்ளைச்சாவடியின் வடக்குப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து கடலில் அடித்து செல்லப்பட்டன. மேலும் கடலோர பகுதியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் அடித்து செல்லப்பட்டன.
மீன்பிடி வலைகளை பாதுகாக்க வைக்கப்படும் 2 களமும் கடல் சீற்றத்தில் சிக்கியுள்ளது. எந்த நேரத்திலும் இந்த 2 களங்களும் கடலுக்குள் விழும் என்ற அபாய நிலையில் உள்ளது.
இதனால் கடலோரப் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்வதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மீனவர்கள் தங்களது மீன் வலை, படகு போன்றவற்றை கடற்கரை பகுதியில் உள்ள சுடுகாட்டில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி பிள்ளைச்சாவடி மீனவ கிராமம், ஆதிதிராவிடர் பகுதி குடியிருப்பு பஞ்சாயத்தார், பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபட திரண்டனர்.
தகவலறிந்த கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அங்கு கூடியிருந்த மக்களிடம் பேசி மறியல் நடத்தவிடாமல் கைவிட செய்தார்.
மேலும் அவர்களோடு, கடல் அரிப்பு பகுதிகளை நேரில் பார்வையிட்டார். கடல் அரிப்பை தடுப்பதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ராட்சத கற்கள் கொட்டப்படும் மற்றும் தூண்டில் முள் வளைவு போல கற்கள் கொட்டப்படும் என வாக்குறுதி அளித்தார்.
இதையேற்று பொதுமக்கள் போராட்ட முடிவை கைவிட்டனர். மறியலுக்காக மீனவர்கள், கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டதால் சிறிதுநேரம் பதட்டம் நிலவியது.
- பானாஜி அருகே உள்ள மபூசா பகுதியில் பாருடன் கூடிய ரெஸ்டாரண்ட் இயங்கி வருகிறது.
- சம்பவ இடத்தில் 2 சிலிண்டர்கள் அப்படியே இருந்தது.
பானாஜி:
கோவா தலைநகர் பானாஜி அருகே உள்ள மபூசா பகுதியில் பாருடன் கூடிய ரெஸ்டாரண்ட் இயங்கி வருகிறது. இங்கு நேற்று அதிகாலை குண்டு வெடித்தது போன்று பயங்கர சத்தம் கேட்டது.
இதில் பாரை ஓட்டி இருந்த ஒரு பங்களா மற்றும் 7 குடியிருப்புகள், 6 வாகனங்கள் சேதம டைந்தன. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
முதலில் அங்கிருந்த சிலிண்டர் வெடித்திருக்கலாம் என போலீசார் கருதினர். ஆனால் சம்பவ இடத்தில் 2 சிலிண்டர்கள் அப்படியே இருந்தது. மேலும் பாரில் மின் விபத்துகளோ அல்லது ஏ.சி. வெடித்தது போன்ற அறிகுறிகள் இல்லை. எனவே அங்கு வெடித்தது என்ன? என்பது குறித்து போலீஸ் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
- 50-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் கடந்த சில நாளுக்கு முன்பாக பெய்த மழையால் மேற்கூரை பழுதடைந்தும், சிமெண்ட் கலவை பெயர்ந்தும் ஆபத்தான நிலையில் உள்ளது.
- பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் சேதம்அடைந்த தொகுப்பு வீடுகளை ஆய்வு செய்தார்.
மீஞ்சூர் ஒன்றியம் நெய்த வாயல் ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் 20 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது. இந்த நிலையில் இங்குள்ள 50-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் கடந்த சில நாளுக்கு முன்பாக பெய்த மழையால் மேற்கூரை பழுதடைந்தும், சிமெண்ட் கலவை பெயர்ந்தும் ஆபத்தான நிலையில் உள்ளது.
இதுகுறித்து அங்கு வசிப்பவர்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் சேதம்அடைந்த தொகுப்பு வீடுகளை ஆய்வு செய்தார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் பாலன் உடன் இருந்தார்.
- தொடர் மழை காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
- மழை நீர் வெளியேற்றும் பணிகளை மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மிக கனமழை பெய்து வந்ததால் கடலூர் சிதம்பரம் பண்ருட்டி, விருத்தாச்சலம், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, கீரப்பாளையம், குமராட்சி, காட்டுமன்னார்கோவில், உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதோடு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடக்கியது.
கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடலூர் மாவட்டத்திற்கு நேரில் வருகை தந்து மழைநீர் சூழ்ந்த விளைநிலங்களையும் கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை குறித்து புகைப்பட கண்காட்சியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.
இந்த நிலையில் நேற்று பெய்த கன மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் 96 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தும், 26 கால்நடைகள் மழை காரணமாக இறந்ததால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டறிந்து மழை நீர் வெளியேற்றும் பணிகளை மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்வருமாறு-
கலெக்டர் அலுவலகம் - 42.8, குப்பநத்தம் - 39.6,வேப்பூர் - 37.0, விருத்தாசலம் - 30.0, மீ-மாத்தூர் - 26.0,கடலூர் - 24.2, சிதம்பரம் - 24.0, வானமாதேவி - 20.6,காட்டுமயிலூர் - 20.0, சேத்தியாதோப்பு - 19.8, பண்ருட்டி - 18.0, வடக்குத்து - 15.0, குடிதாங்கி - 14.0, ஸ்ரீமுஷ்ணம் - 11.2, பெல்லாந்துறை - 10.6, கே.எம்.கோயில் - 9.0, அண்ணாமலைநகர் - 8.4, புவனகிரி - 8.0, லால்பேட்டை - 8.0, லக்கூர் - 7.2, குறிஞ்சிப்பாடி - 7.0, தொழுதூர் - 5.0, கீழ்செருவாய் - 5.0, கொத்தவாச்சேரி - 2.0, மொத்தம் - 412.40 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது
- தனது நிலத்தில் கட்டுமான பணிக்காக மண் அகற்ற மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றிருந்தார்
- இதில் 3 வீடுகள் சேதமடைந்ததுடன், அதில் ஒரு வீடு இடிந்து விழுந்துள்ளது.
கன்னியாகுமரி :
புதுக்கடை அருகே மறு கண்டான் விளை பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது 53). இவர் அந்த பகுதியில் உள்ள தனது நிலத்தில் கட்டுமான பணிக்காக மண் அகற்ற மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றிருந்தார். ஆனால் அரசின் அனுமதியை மீறி அதிக அளவில் மண் அகற்றியதாக கூறப்படுகிறது. இதில் 3 வீடுகள் சேதமடைந்ததுடன், அதில் ஒரு வீடு இடிந்து விழுந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விளாத்துறை கிராம நிர்வாக அலுவலர் பூபதி கண்ணன் என்பவர் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- 12 கால்நடைகள் இறந்த நிலையில், 8 குடிசை வீடுகள் இடிந்து சேதம் அடைந்து உள்ளன.
- பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கடலூர்:
வடகிழக்கு பருவ மழை தொடங்கியதை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் கன மழை பெய்து வந்தது. நேற்று கடலூர் மாவ ட்டத்தில் அண்ணாமலை நகர், சிதம்பரம், பரங்கி ப்பேட்டை, வடக்குத்து, கொத்வாச்சேரி, புவனகிரி காட்டுமன்னார்கோவில் லால்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கன மழை பெய்த காரணத்தினால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விளை நிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் தொடர் மழை காரணமாக 12 கால்நடைகள் இறந்த நிலையில், 8 குடிசை வீடுகள் இடிந்து சேதம் அடைந்து உள்ளன.
இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் ஏரிகள் நிரம்பி வந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரையும், வீடுகள் பகுதிகளில் சொந்த மழை நீரையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியேற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்வருமாறு-அண்ணாமலைநகர் - 32.0, சிதம்பரம் - 28.8, பரங்கிப்பேட்டை - 28.0, மீ-மாத்தூர் - 2.0, வடகுத்து - 1.0, கொத்தவாச்சேரி - 1.0, புவனகிரி - 1.0, காட்டுமன்னார்கோயில் - 1.0, லால்பேட்டை - 1.0, மொத்தம் - 95.80 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்